மலேசியாவில் நடந்து முடிந்துள்ள 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தமிழின் வளர்ச்சிக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் உலக அளவிலான ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி 1964-ல் உருவானது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
தனிநாயகம் அடிகளாரின் முயற்சியில் உருவான இந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச அளவில் இந்த நிறுவனத்துக்கு பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காக, நிறுவனத்தின் தலைவர்களாக வெளிநாட்டுத் தமிழறிஞர்களை தேர்வு செய்வதையே மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவர்களது தலைமையில் உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தி வருகிறது உலகத் தமிழாராய்ச்சி நிருவனம்.
பத்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிறுவனத்தின் தலைவர் மலேசியா பேராசிரியர் மாரிமுத்து தலைமையில் கடந்த 2019-ல் நடந்தது. 11-வது மாநாடு 2021-ல் நடந்திருக்க வேண்டும். கொரோனா நோய் தாக்கத்தினால் நடக்கவில்லை.
இந்த நிலையில், மாரிமுத்துவின் முயற்சியில் கடந்த ஜூலை 21 முதல் 23-ந்தேதி வரை 11-வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசியாவில் நடத்தி முடித்திருகிறது உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இந்திய கிளை. இதன் ஒருங்கிணைப்பாளரான நந்தா மாசிலாமணி அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்.
உயரிய நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட இந்த மாநாட்டை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம்தான் தமிழறிஞர்களிடம் இப்போதும் மனக்கசப்பாக வெடித்துக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தின் தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட தமிழறிஞர்கள், தமிழக முதல்வர் ஸ்டா-னை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைத்தனர். அதேபோல, அமைச்சர் உதயநிதி தொடங்கி 34 அமைச்சர்களையும் நேரில் சந்தித்தனர். தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர்.
பொதுவாக, "உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தால் அதில் தமிழக அரசின் முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் பறைசாற்றும் வகையில் நிதியுதவி அளிப்பதோடு அமைச்சர்களையும் மாநாட்டிற்கு தமிழக அரசு அனுப்பி வைக்கும். ஆனால், இந்த மாநாட்டிற்கு அமைச்சர்களையும் அனுப்பி வைக்கவில்லை; நிதி உதவியும் வழங்கவில்லை. கண்டும் காணாமல் இருந்துவிட்டது. மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து உதயநிதி பேசியதைத் தவிர வேறு எந்த பங்களிப்பையும் செய்யவில்லை தமிழக அரசு. சிலரின் உள்ளடி வேலைகள்தான் இதற்கு காரணம்''’என்கிறார்கள் தமிழறிஞர்கள்.
மேலும் நாம் விசாரித்தபோது,’"உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியாவில் நடக்க விருப்பதை அறிந்ததுமே, இதனை தமிழக அரசு அங்கீகரித்துவிடப்போகிறது என யோசித்து, மாநாட்டுக்கு எதிராக முனைவர் பொன்னவைக்கோ தலைமையிலான ஒரு அமைப்பு, "உலகத் தமிழராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருக்கும் பொன்னவைக்கோ தலைமையிலான அமைப்புதான், உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடத்தும் அதிகாரம் கொண்டது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை' என தமிழக அரசுக்கு புகார் தெரிவித்தது .
அதேபோல, மலேசிய அரசுக்கும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மாரிமுத்துவுக்கும் இதே புகாரை அனுப்பிய நிலையில், மலேசிய அரசும் மாரிமுத்து உள்ளிட்ட தமிழறிஞர்களும் இதனை புறந்தள்ளினர்.
ஆனால் தமிழக அரசோ, எது அசல் அமைப்பு? யாருக்கு அதிகாரம் இருக்கிறது? என தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலம் விசாரிக்கச் சொன்னது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்தது.
இதனையடுத்து, மலேசியா மாநாட்டை அங்கீகரிக்கும் வகையில் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான காசோலை வழங்க தமிழ் வளர்ச்சித்துறையை கவனிக்கும் முதல்வரின் மூன்றாவது செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ். ஒப்புதலும் அளித்துள்ளார். மேலும், உதயநிதி மற்றும் சீனியர் அமைச்சர்கள் இரண்டு பேரை அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், நிதித்துறைச் செயலாளர் உதய சந்திரனோ நிதி உதவிக்கான ஒப்புதலைத் தரவில்லை. முதல்வரிடமுள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி, மாநாட்டிற்கு அமைச்சர்களை அனுப்பி வைக்கும் முடிவையும் தடுத்துவிட்டார். மாநாட்டுக்கு எதிரான அமைப்பினரின் தூண்டுதல்தான் இதற்கு காரணம்''”என கொதிக்கிறார்கள் தமிழறிஞர்கள்.
இதற்கிடையே, பொன்னவைக்கோ தலைமையிலான அமைப்பு, மலேசிய மாநாட்டிற்கு முன்னதாக அதே மாநாட்டை நடத்த திட்டமிட்டு ஜூலை 17, 18, 19-தேதிகளில் சென்னையில் நடத்தியிருக்கிறது. மேலும், 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்ற பேரில் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாரிமுத்துவுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இந்த கடிதம் தமிழறிஞர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்படி ஒரு கடிதம் எதற்காக எழுதப்பட்டது என பொன்னவைக்கோ ஆதரவு தமிழறிஞர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிகாகோ நகரில் நடந்து முடிந்தபோது, புதிய தலைவராக பொன்னவைக்கோ தேர்வு செய்யப்பட்டார். மாரிமுத்துவின் பதவி காலம் முடிந்துவிட்டது.
அந்த வகையில், பொன்னவைக்கோ தலைமையிலான உலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்கு மட்டும்தான் 11-வது மாநாட்டை நடத்த அதிகாரம் உண்டு. மாரிமுத்துவுக்கு அதிகாரம் இல்லை. அதனால் தான் எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருக்கிறார் கள்''’என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
மாநாடு குறித்து இப்படி இரு பிரிவுகளாக மோதிக்கொள்வதை மற்ற நாடுகளின் தமிழறிஞர்கள் ரசிக்கவில்லை. பெரும் விவாதங்களும் நடந்து முடிந்திருக்கின்றன.
இது குறித்து விசாரித்தபோது, "தனிநாயகம் அடிகளார் தலைமையில் உருவானது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். அதன் பேரில் தான் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 9-வது மாநாடு முடிந்ததும் அதன் தலைவராக இருந்த ஜப்பானை சேர்ந்த நொபுரு கரோஷிமா பதவி விலகினார்.
புதிய தலைவராக மாரிமுத்து தேர்வு செய்யப் பட்டார்.
மாரிமுத்து தலைமையில் 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019-ல் சிகாகோ நகரில் நடந்தது. மாநாடு நடத்தும் பொறுப்பினை சிகாகோ பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. துணைத் தலைவராக இருந்த பொன்னவைக்கோ இதனை ஏற்க மறுத்தார். சில தமிழ்ச்சங்கங்களை இணைத்துக் கொண்டு மாநாடு நடந்தது.
மாநாடு முடிந்த தும் ஒரு கூட்டத் தைக் கூட்டினார் பொன்னவைக்கோ. கூட்டத்தின் முடிவில், திடீரென்று பொன்னவைக்கோ புதிய தலைவராக முன்மொழியப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் சிலர் இதனை செய்தனர். ஆனால், புதிய தலைவர் குறித்த எந்த அஜெண்டாவும் இல்லாமலும் சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும் இப்படி அறிவிக்கப் பட்டதை கூட்டத்தின் தலைவர் மாரிமுத்துவும், நிர்வாகிகளும் ஏற்கமறுத்தனர். மினிட் புத்தகத்திலும் கையெழுத்து போடவில்லை மாரிமுத்து. அதனால் பொன்னவைக்கோ தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது நீர்த்துப்போனது.
தலைவராக முடியவில்லையே என்கிற விரக்தியில், வேர்ல்ட் தமிழ் ரிசர்ச் அசோசியேசன் என்ற அமைப்பை தனிப்பட்ட முறையில் தொடங்கி அதனை கம்பெனி சட்டவிதிகளின் கீழ் பதிவு செய்துள்ளார் பொன்னவைக்கோ. அதனால், அவரது அமைப்பிற்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் துக்கும் சம்பந்தமில்லை.
இதெல்லாம் தெரிந்ததால்தான், 11-வது மாநாட்டினை நாம் இணைந்து நடத்துவோம்; எங்கள் சார்பில் 200 தமிழறிஞர்கள் கலந்துகொள்வார்கள்; அவர்களுக்குரிய செலவுகளை ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்பட இசைவு தெரிவிக்க வேண்டும் என்று மாநாட்டின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பினார் பொன்னவைக்கோ. ஆனால் அவர்களுக்குரிய செலவுகளை ஏற்கும் பணச்சூழல், மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடம் இல்லாததால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.
மாநாடு நடத்தும் உரிமை பொன்னவைக்கோ அமைப்பிற்குத்தான் இருப்பது உண்மையானால், மலேசிய மாநாட்டை இணைந்து நடத்தலாம்; எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என அவர் எதற்கு கடிதம் எழுத வேண்டும்? ஆக, மாநாடு சிறப்பாக நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அதிகாரம் எங்களுக்குத்தான் என்கிற குழப்பத்தை உருவாக்கி குளிர் காய்ந்தனர். ஆனால் அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.
ஆக, இப்போதுவரை தலைவராக இருப்பவர் மாரிமுத்துதான். அவரது தலைமையிலான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு மட்டுமே மாநாடு நடத்தும் உரிமையும் அதிகாரமும் உண்டு. அந்த வகையில்தான், மலேசியாவில் மாநாடு நடத்தப்பட்டது. என்கிறார்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழறிஞர்கள்.